திமுக அரசு பொறுப்பேற்று ஒராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், சென்னையில் அரசுப் பேருந்தில் பயணம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டிலிருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்கு சென்று, அங்கு அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார். இதையடுத்து மெரினா செல்லும் வழியில், மாநகர அரசுப் பேருந்தில் ஏறிய முதலமைச்சர் பயணிகளின் குறைகளை கேட்டறிந்தார்.
குறிப்பாக பெண்களிடம் பேருந்துகளின் இயக்கம் குறித்து கேட்டறிந்தார். அப்போது சாதாரண கட்டணப் பேருந்துகளை அதிக அளவில் இயக்க வேண்டும் என பெண்கள் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து மெரினா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.