இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் Pt web
தமிழ்நாடு

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தீவிரமடைந்தது ஏன்..? பின்னணி என்ன..?

தலைநகரம் சென்னையில் ஒரு வார காலமாக தீவிரப் போராட்டத்தில் குதித்திருக்கின்றனர் ஆசிரியர்கள். இந்தப் போராட்டத்தின் பின்னணி என்ன? என்பதை பார்க்கலாம்.

PT WEB

பள்ளிக்கூடங்களில் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பயிற்றுவிப்பவர்களையே இடைநிலை ஆசிரியர்கள் என்கிறோம். எனில், ஒரு குழந்தைக்கான அடிப்படைக் கல்வியை கொடுக்க கூடியவர்கள் இவர்கள்! அரசுப் பணியில் உள்ளவர்கள் என்றாலும், இவர்களின் ஊதிய விவகாரத்தில் வேறுபாடுகள் நிலவுகின்றன. அதாவது, 2009 மே 31 வரை அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்களுக்கு 8,370 ரூபாய் அடிப்படை ஊதியமாக வழங்கப்பட்டுவருகிறது என்றால், 2009ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி முதல் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களூக்கு அடிப்படை ஊதியமாக 5,200 ரூபாய் என்றே வழங்கப்பட்டுவருகிறது.

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

மேலோட்டமாக பார்க்கும்போது வெறும் 3170 ரூபாய் வேறுபாடு என்பதுபோல தோன்றினாலும் அப்படி அல்ல. அடிப்படை ஊதியத்தைக் கணக்காகக் கொண்டே எல்லா பணப் பயன்களும் நிர்ணயிக்கப்படும் என்பதால், ஆண்டு கணக்கில் பார்க்கும்போது பல லட்ச ரூபாய் வேறுபாடாக இது அமையும். அரசு பள்ளிகளிலேயே ஒரே விதமான வேலையை செய்யும் இரு ஆசிரியர்களிடையே இரு வேறு ஊதியங்களை அளிப்பது நியாயம் அல்ல, எனவே சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பதே ஆசிரியர்களின் அடிப்படை கோரிக்கை!

இந்த நடைமுறை கொண்டுவரப்பட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாகவே ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்திவருகின்றனர். இது ஆசிரியர் தரப்பு நியாயம் என்றால் அதிகரித்துக் கொண்டே செல்லும் அரசு ஊழியர் ஊதியம் - ஓய்வூதிய சுமை அரசுக்கு பிரச்னை. முந்தைய காலகட்ட ஊதிய நடைமுறைகளை இனியும் தொடர முடியாது; மாநிலத்தின் நிதி நிலைமை அதை அனுமதிக்காது என்பது அரசு தரப்பு நியாயம்.

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

இதனூடாக ஒவ்வொரு தேர்தலின்போதும், ஆசிரியர்களின் கோரிக்கைக்கு செவி சாய்ப்போம் என்று ஓட்டுக்காக அரசியல் கட்சிகள் சொல்வதும் நடக்கிறது. அப்படித்தான் இடைநிலை ஆசிரியர்களின் இந்தக் கோரிக்கை நியாயமானது என்று கூறியதோடு, திமுக ஆட்சிக்கு வந்தால், இந்த ஊதிய முரண்பாடு களையப்படும் என்றும் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது திமுக. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இத்தகு பின்னணியில்தான் கிட்டத்தட்ட 20,000 இடைநிலை ஆசிரியர்கள் தீவிரமான போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர்.