தமிழ்நாடு

திருப்பூர்: 35 மயில்கள் விஷம் வைத்து கொலை; விவசாயி கைது

JustinDurai
திருப்பூர் மாவட்டம் பொல்லிகாளிபாளையம் அருகே மயில்களுக்கு விஷம் வைத்துக் கொன்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பொல்லிகாளிபாளையம் பகுதியில் விவசாய தோட்டத்தில் கடந்த ஜூலை 9-ஆம் தேதியன்று 24 மயில்கள் இறந்து கிடந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட பணியாளர்கள் குழு, அதே இடத்தில் மேலும் 10 மயில்கள் இறந்து கிடப்பதை கண்டு பிடித்தனர். மொத்தம் 35 மயில்கள் இறந்து கிடந்ததைத் தொடர்ந்து அரசு கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு இறந்த மயில்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பிய பின்னர் அங்கேயே உள்ள குழியில் எரியூட்டப்பட்டது.
பின்னர் அமராவதி வனச்சரக அலுவலகத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட மோப்பநாய் டிக்ஸி உதவியுடன் சோதனை செய்தபோது மயில்கள் இறந்து கிடந்த இடத்தில் இருந்து ஒருவரது தோட்டம் வரை சென்று அங்கு ஒரு மயில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இருந்த இடத்தில் நின்று விட்டது.
இதைத்தொடர்ந்து அங்கு தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வரும் உகாயனூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த ஒருவரை அழைத்து விசாரித்தபோது தோட்டத்தில் அதிக அளவில் மயில்கள் வந்து விவசாய விதைகளை தின்றுவிட்டு செல்வதால் நஷ்டம் ஏற்படுவதாக கருதி மயில்கள் உண்ணும் உணவில் விஷம் கலந்து போட்டுள்ளார். அதனை சாப்பிட்ட மயில்கள் ஆங்காங்கே மயங்கி விழுந்து இறந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.