தமிழ்நாடு

தமிழக அரசின் உளவுத்துறைக்கு கூடுதல் எஸ்.பி நியமனம்

தமிழக அரசின் உளவுத்துறைக்கு கூடுதல் எஸ்.பி நியமனம்

நிவேதா ஜெகராஜா

தமிழக காவல்துறையில் முதல் முறையாக உளவுத்துறைக்கு 2 எஸ்பிக்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் முக்கிய பொறுப்புகளில் உள்ள ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்வது வாடிக்கையான ஒன்று. அந்தவகையில் கடந்த 4 மாதங்களில் தலைமை செயலாளர், தமிழக டி.ஜி.பி, உளவுத்துறை அதிகாரிகள், சென்னை காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் என பலர் மாற்றப்பட்டுள்ளனர். அந்த வரிசையில் தற்போது எஸ்.எஸ்.பி என அழைக்கப்படும் உளவுத்துறை எஸ்.பி பதவியில் ஏற்கனவே அரவிந்தன் இருந்து வரும் நிலையில் கூடுதலாக ஒரு எஸ்பியயை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

இப்போது உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், டிஐஜியாக ஆசியம்மாள், எஸ்எஸ்பியாக அரவிந்தன் ஆகியோர் உள்ளனர். ஐஜி பதவி காலியாகவே உள்ளது. உளவுத்துறையில் உயர் அதிகாரிகள் இருந்தாலும் எஸ்எஸ்பி என்றழைக்கப்படும் எஸ்பி முக்கிய பொறுப்பாக உள்ளது. ஏனெனில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் உள்ள அத்தனை நிகழ்வுகளும் தகவல்களும் கீழ்மட்ட அதிகாரிகள் மூலம் போய் சேரும். மேலும் அவர்தான் தன்னுடைய உயர் அதிகாரிகளுக்கு தகவல்களை அளிப்பார். இந்த முக்கிய பொறுப்பில் தற்போது அரவிந்தன் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தமிழக காவல்துறை வரலாற்றில் முதல் முறையாக உளவுத்துறைக்கு மேலும் ஒரு எஸ்எஸ்பி பணியிடத்தை உருவாக்கி உள்ளது. அதற்கான அறிவிப்பை தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்தப் பதவியில் எஸ். சரவணனை நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கு முன் ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவில் எஸ்பியாக இருந்தார். இந்த பிரிவும் உளவுத்துறைக்கு கீழ் செயல்பட்டு வரும் பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது.