தமிழ்நாடு

தமிழகத்தில் மீண்டும் ஒரு ஆணவக் கொலை.. காதல் தம்பதி சடலமாக மீட்பு

தமிழகத்தில் மீண்டும் ஒரு ஆணவக் கொலை.. காதல் தம்பதி சடலமாக மீட்பு

webteam

தமிழகத்தில் மீண்டும் ஒருமுறை ஆணவக் கொலை நடைபெற்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சூடுகொண்டபள்ளியை சேர்ந்தவர் நத்திஷ். அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் சுவாதி. இருவரும் ஒருவரையொருவர் மனதார காதலித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி கடந்த சில மாதங்களுக்கு முன் நத்திஷ் மற்றும் சுவாதி பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கர்நாடகாவின் மாண்டியா மலஹள்ளியில் உள்ள காவிரியாற்றில் நத்திஷ்- சுவாதி காதல் தம்பதிகளின் சடலங்களை கர்நாடகா போலீசார் மீட்டுள்ளனர். காதலர்களை கொன்றுவிட்டு கை, கால்களை கட்டிய கொலையாளிகள் காவிரி ஆற்றில் அவர்களை வீசி சென்றுள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அழுகிய நிலையில் அவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளதால் சில நாட்களுக்கு முன்பே காதல் தம்பதியினர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதனிடையே  காதல் தம்பதியினர் கொலை தொடர்பான பெண்ணின் தந்தை உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  வேறு சமூகத்தை சேர்ந்த ஆணை திருமணம் செய்ததால் காதல் தம்பதியை அவர்கள் ஆணவக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் கொலை தொடர்பான இன்னும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருப்பூரில் பட்டப்பகலில் நடைபெற்ற கௌசல்யா- சங்கர் ஆணவக் கொலை தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் ஒரு ஆணவக் கொலை நடைபெற்றுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.