தமிழ்நாடு

ஜெயஸ்ரீ குடும்பத்தினருக்கு பிரேமலதா விஜயகாந்த் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி  

webteam
பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட ஜெயஸ்ரீ குடும்பத்தினருக்கு தேமுதிக சார்பில் ஒரு லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.
 
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்கிற பத்தாம் வகுப்பு மாணவி கடந்த சில நாள்களுக்கு முன்னர் வீட்டில் தனியாக இருந்த பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். முன்னதாக சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் முருகன் உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். 
 
 
இதனிடையே உயிரிழந்த ஜெயஸ்ரீயின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக முன்னாள் அமைச்சருமான பொன்முடி ஜெயஸ்ரீயின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அத்துடன் ரூபாய் 50,000 நிதி உதவி வழங்கினார். அதன்பின்னர் ஜெயஸ்ரீயின் உடல் அதே கிராமத்தில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
இந்நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்  இன்று ஜெயஸ்ரீயின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். இது தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரை கிராமத்தில் முன்பகை காரணமாக, எரித்துக் கொல்லப்பட்ட ஜெயஸ்ரீ குடும்பத்தை பிரேமலதா நேரில் சந்தித்து ₹ 1 லட்சம் ரூபாய் நிவாரண தொகையை வழங்கி ஆறுதல் கூறினார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.  அதற்கான புகைப்படங்களையும் தன் பதிவில் விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.