தமிழ்நாடு

சத்தமில்லாமல் நடக்கிறதா மான் வேட்டை?: அரசு பேருந்தில் கைப்பற்றப்பட்ட 59 மான் கொம்புகள்!

webteam

நாகை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள நண்டலறு காவல் சோதனைச் சாவடியில் வழக்கம்போல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேதாரண்யத்தில் இருந்து வந்த அரசுப் பேருந்தை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையின் போது பேருந்தில் பயணம் செய்த ஒருவரிடம் துணிகளால் சுற்றப்பட்ட பை ஒன்று இருந்துள்ளது.

சந்தேகமடைந்த போலீசார், பையை சோதனை செய்தனர். பையில் துண்டு துண்டுகளாக 59 மான் கொம்புகள் இருந்தன. இதனை அடுத்து மான்கொம்புகளை கைப்பற்றிய போலீசார், அதனை கடத்தி வந்த நபரையும் பிடித்து பொறையாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பிடிபட்ட நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கைதான நபர் காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை கிராமத்தைச் சேர்ந்த அரவிந்தராஜ் (21) என்பதும், அவர் யோகா மாஸ்டராக பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது. மேலும் மான் கொம்புகளை மருந்துக்காக எடுத்துச் செல்வதாகவும் கைதான அரவிந்தராஜ் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அரவிந்தராஜை போலீசார் கைது செய்துள்ளனர்

59 மான் கொம்புகள் மொத்தமாக அவருக்கு கிடைத்தது எப்படி? கொம்புக்காக மான்கள் வேட்டையாட்டிருந்தால் இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில் இது தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.