நீலகிரியில் உயரழுத்த மின்கம்பியில் ஏற்பட்ட மின்கசிவால் ஒரு யானை, 5 பன்றிகள், ஒரு கீரி மற்றும் 2 காக்கைகள் உயிர் இழந்தன.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள சேரம்பாடி காவல்நிலையம் பின்புறமுள்ள உள்ள வனப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அங்கு ரோந்து சென்ற வனத்துறையினர் துர்நாற்றம் எங்கியிருந்து வருகிறது என பார்வையிட்டனர். அப்போது ஒரு யானை, 5 பன்றிகள், ஒரு கீரி மற்றும் 2 காக்கைகள் கருகிய நிலையில் உயிரிழந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து மேற்கொண்ட ஆய்வில், சிங்காராவில் இருந்து கேரளாவிற்கு செல்லும் உயரழுத்த மின்கம்பிகளின் மின்கோபுரத்திலிருந்து மின்கசிவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அந்த மின்கசிவு பூமியில் பாய்ந்ததும் தெரிய வந்தது. இதனால் அவ்வழியாக சென்ற யானை, பன்றிகள், கீரி மற்றும் மின்சாரம் தாக்கி இறந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் நடந்து 5 நாட்கள் ஆகி இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த ஆண் யானைக்கு 15 வயது இருக்கும் எனவும் வனத்துறையினர் கூறினர்.