தமிழ்நாடு

டாஸ்மாக் மதுபானம் அருந்தியவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

நிவேதா ஜெகராஜா

கோவையில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே அங்கு மதுபானம் வாங்கி அருந்திய ஒருவர், சிறிது நேரத்துக்கு பின்  உயிரிழந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவருடன் சேர்ந்து மது அருந்திய மற்றொரு நபருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டதால், கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட மது காரணமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 52). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். 76-வது வார்டு திமுக துணை செயலாளராக உள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த திமுக வார்டு செயலாளர் சிவா (வயது 47) என்பவருடன் சேர்ந்து பேரூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அங்கு மது வாங்கி இருவரும் குடித்துள்ளனர். மது அருந்திய சில மணி நேரத்தில் சண்முகமும், சிவாவும் தலைசுற்றல் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளனர்.

இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அரை மணி நேரம் கழித்து சிவா பலமுறை வாந்தி எடுத்துள்ளார். பின்னர் 2 பேரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகம் பரிதாபமாக உயிரிழந்தார். சிவா கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து, சண்முகத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மதியம் 12 மணிக்கு டாஸ்மாக் கடை திறக்க வேண்டும் என்ற நிலையில், அதற்கு முன்னதாகவே சண்முகமும், சிவாவும் மது வாங்கி அருந்தியுள்ளனர். அதனால், கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்த மது பாட்டிலால் உடல்நலம் பாதிக்கப்பட்டதா என்ற கோணத்தில் செல்வபுரம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், கடையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் கேனில் இருந்த தண்ணீரை மதுவில் கலந்து குடித்தபோது, தண்ணீர் கசப்பாக இருந்துள்ளதாக பார் ஊழியர்களிடம் இருவரும் கேட்டதாகவும், அதற்கு அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதற்கு பின் சற்று நேரத்தில் தான் இருவரும் மயங்கி விழுந்துள்ளனர்.

அதனால், இருவரும் குடித்த மதுவா அல்லது டாஸ்மாக் கடையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் ஏதேனும் இருவரின் உடல் பாதிக்கப்பட்டதற்கும், சண்முகம் உயிரிழந்ததற்கும் காரணமா என்பது பிரேத பரிசோதனையில் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சண்முகத்தின் மகன் எதிராஜ் அளித்த புகாரில், சந்தேக மரணம் என செல்வபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.