திருப்பூரில் வீட்டின் கதவை தாழிட்டுக்கொண்ட குழந்தையை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
குழந்தை வளர்ப்பில் மிகவும் முக்கியமான ஒன்று அக்குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்வது. இதற்காக பெற்றோர்கள் குழந்தையை அதிக கவனத்துடன். சிறு குழந்தைகள் தாங்கள் செய்யும் செயலினால் ஏற்படும் விளைவுகளை அறியாமல் செயல்படுவார்கள். அந்தவகையில் வீட்டில் தனியாக ஒரு குழந்தை சிக்கிக் கொண்ட சம்பவம் நெஞ்சை பதறவைக்கிறது.
திருப்பூரின் நெருப்பெரிச்சல் பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி. இவர் தனது ஒன்றரை வயது குழந்தையை வீட்டிற்குள் தூங்கவைத்து விட்டு வெளியே இருந்துள்ளார் மீனாட்சி. அப்போது வீட்டின் இரும்பு கதவு தாழிடாமல் சற்று அடைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தூங்கி கொண்டிருந்த குழந்தை வீழித்தவுடன் கதவை லேசாக தள்ளியுள்ளது. இதனால் எதிர்பாராத விதமாக இரும்பு கதவின் அடிபகுதி தாழ்பால் பூட்டிக் கொண்டது. இதனால் பூட்டப்பட்ட வீட்டிற்குள் ஒன்றரை வயது குழந்தை தனியாக சிக்கிக் கொண்டது.
இதனைத் தொடர்ந்து அக்குழந்தையின் தாய் வெளியிலிருந்து கதவை திறக்க முயற்சி செய்துள்ளார். எனினும் அவரால் திறக்கமுடியாததால் தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் குழந்தையிடம் பேச்சு கொட்டுத்தவாறே மீட்க ஆரம்பித்தனர். அவர்கள் உயர்தர ஹைடராலிக் கருவியைக் கொண்டு கதவை திறந்தனர். பின்னர் அக்குழந்தையை மீட்டு தாய் மீனாட்சியிடம் அளித்தனர்.
இதனையடுத்து அக்குழந்தையின் தாய் கண்ணீர் மல்க தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களுக்கு இந்தச் சம்பவம் ஒரு பாடமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இனியாவது குழந்தைகளை வீட்டில் தனியாக விடாமல் பெற்றோர்கள் அதிக கவனத்துடன் இருக்கவேண்டும் என்று இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.