தமிழ்நாடு

திருத்தணியில் இன்றும் கடுமையான வெயில் ! - தமிழகத்தில் 9 இடங்களில் வெயில் சதம்

jagadeesh

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாகத் திருத்தணியில் 109.4 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியிருக்கிறது. இந்தாண்டின் அதிகபட்ச வெயில் பதிவான ஊர்களில் நேற்று திருத்தணி 110 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகி முதலிடம் பிடித்தது. இதனிடையே தமிழகத்தில் இன்று மட்டும் 9 இடங்களில் வெயில் சதமடித்தது.

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்தக் கத்தரி வெயில் 28 ஆம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 9 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட் -ஐ தாண்டி பதிவாகியுள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு தமிழகத்தில் இனி வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதற்கு ஏற்றார்போல இன்று தமிழகத்தில் வெப்பத்தின் அளவு அதிகரித்தது. அதன்படி தமிழகத்தில் இன்று அதிகபட்சமாகத் திருத்தணியில் 109.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியிருக்கிறது.

இதற்கு அடுத்தபடியாக வேலூர் 107.6, திருச்சி 106.7,மதுரை விமான நிலையம் 106.16, கரூர் பரமத்தி 105.08, சேலம் 102.9, நாமக்கல் 102.2, சென்னை மீனம்பாக்கம் 101.8, பாளையங்கோட்டை 101.3, தருமபுரி 100.4 ஆகிய இடங்களில் டிகிரி பாரன்ஹீட்டாக வெப்பம் பதிவாகியிருக்கிறது.