தமிழ்நாடு

"கமல்ஹாசன் பேசியது போலித்தனத்தின் உச்சம்": அமைச்சர் க.பாண்டியராஜன்

EllusamyKarthik

விஸ்வரூபம் பட வெளியீட்டின்போது அதிமுக அரசு தம்மை நடுத்தெருவில் நிறுத்த முயற்சித்ததாகவும், எம்ஜிஆர் இருந்திருந்தால் அந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்காது எனவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது தோட்டத்தில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

பின்னர் நடைபெற்ற விழாவில் "காலத்தை வென்றவன்" என்ற தலைப்பில் எம்.ஜி.ஆர் குறித்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர் பழனிச்சாமி, திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் கலந்துகொண்டனர். மேலும் எம்.ஜி.ஆர் உடன் தனது நினைவுகளை பகிர்ந்து கொண்ட கமல், தானும் எம்.ஜி.ஆரின் ஒரு பிள்ளை எனக் கூறினார்.

இந்நிலையில், விஸ்வரூபம் திரைப்படம் வெளியீட்டில் பிரச்னை ஏற்பட்டபோது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உதவியதாக கமல்ஹாசன் அப்போதே பதிவு செய்ததாக தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை அருகே திருநின்றவூரில் உள்ள மணி மண்டபத்தில், எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அங்குள்ள முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவச் சிலைகளுக்கு அமைச்சர் க.பாண்டியராஜன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நலத்திட்ட உதவிகளையும் வழங்கிய அமைச்சர், பின்னர் செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது, விஸ்வரூபம் பட வெளியீட்டின்போது தன்னை நடுத்தெருவில் நிறுத்த அதிமுக அரசு முயன்றதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த க.பாண்டியராஜன், கமல்ஹாசன் பேசியது போலித்தனத்தின் உச்சம் என்று விமர்சித்தார்