பாஜக தமிழக தலைவர் தமிழிசையிடம் செய்தியாளர் சந்திப்பின்போது பெட்ரோல் விலை உயர்வு பற்றி கேள்வி எழுப்பிய ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழிசை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவருக்கு பின்னால் இருந்த காக்கிச் சட்டை அணிந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் பெட்ரோல் விலை ஏன் இப்படி உயர்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். “ஒரு நிமிஷம் அக்கா, பெட்ரோல் விலை ஏன் உயர்கிறது” என்று ஆட்டோ டிரைவர் கேட்க, செய்தியாளர்களை பார்த்துக் கொண்டிருந்த தமிழிசை சிரித்துக் கொண்டே பேட்டியை தொடர்கிறார். தமிழிசைக்குப் பின்னால் இருந்த பாஜகவினர் உடனடியாக அந்த ஆட்டோ டிரைவரை பிடித்து வெளியே தள்ளினர்.
தமிழிசை பேட்டி அளித்துக் கொண்டிருக்கும் போது இந்தச் சம்பவம் நடைபெற்றதால் கூடவே அந்தக் காட்சிகளும் பதிவாகிவிட்டன. மேலும், இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவியது. அந்த வீடியோவை பார்த்தால், முதலில் ஆட்டோ டிரைவரின் தலைமுடியை தமிழிசைக்கு பின்னால் இருந்த நபர் இழுக்கிறார். பின்னர், அவரை வெளியே இழுத்து தள்ளுகிறார். தமிழிசைக்கு அருகில் இருக்கும் நபரும் ஆட்டோ டிரைவரை பிடித்து தள்ளுகிறார். பின்னர் ஆட்டோர் டிரைவர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த ஆட்டோ டிரைவர் டைம்ஸ் நவ் இடம் கூறுகையில், “ஆட்டோ டிரைவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பற்றிய எனது வேதனையைதான் வெளிப்படுத்தினேன். ஆனால், அவர்கள் தவறாக எடுத்துக் கொண்டார்கள். இதுதான் நடந்தது. ஒரு நாளைக்கு 300 ரூபாய்க்கு பெட்ரோல் போடுகிறோம். ஆட்டோ வாடகைக்கு ரூ150 கொடுக்கிறோம். பெட்ரோல் விலை உயர்வால் வாடகை போக ஒரு நாளைக்கு 350 ரூபாய் தான் கிடைக்கிறது. சாப்பாடு உள்ளிட்ட செலவுக்கு 500 ரூபாய்க்கு மேல் செலவாகும். எங்களால் சமாளிக்க முடியவில்லை. ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்”என்றார்.
இதுகுறித்து பாஜக நிர்வாகி ஒருவர் கூறுகையில், “ஆட்டோ டிரைவர் பேசிய விதம் அவர் குடிபோதையில் இருந்ததை போல் தோன்றியது. அவர் அந்த இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் தாக்கப்படவில்லை” என்றார்.
மேலும் இது குறித்து தமிழிசை, “ஆட்டோ டிரைவர் தாக்கப்படவில்லை. அப்படி யாரேனும் அவரை தாக்கி இருந்தால் அது கண்டிக்கத்தக்கது” என்றார்.