தமிழ்நாடு

‘தாயுள்ளம் கொண்ட காவல்துறைக்கு நன்றி’ - அமெரிக்காவிலிருந்து மூதாட்டி எழுதிய கடிதம்

‘தாயுள்ளம் கொண்ட காவல்துறைக்கு நன்றி’ - அமெரிக்காவிலிருந்து மூதாட்டி எழுதிய கடிதம்

webteam

சென்னை நொளம்பூரில் உள்ள தன்னுடைய வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட இரண்டே நாளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதற்கு, காவல்துறையை பாராட்டி அமெரிக்காவில் இருந்து மூதாட்டி ஒருவர் கடிதம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். 

சென்னை மேற்கு முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமாரி. இவரது கணவர் தினகரன். 73 வயதான வசந்தகுமாரி கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவிலுள்ள மகள் வீட்டிற்கு கணவருடன் சென்றுள்ளார். வசந்தகுமாரி தனது வீட்டை மாதம் ஒரு முறை சுத்தம் செய்ய சின்ன நொளம்பூரை சேர்ந்த வள்ளி என்பவரை நியமித்துவிட்டுச் சென்றுள்ளார். அதன்படி, கடந்த வாரம் சுத்தம் செய்ய வள்ளி சென்றபோது, வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தன. இதையடுத்து வள்ளி உரிமையாளருக்கு தகவல் அளித்தார். 

பின்னர் வீட்டில் கொள்ளை போனது குறித்து அமெரிக்காவில் இருந்தே சென்னை மேற்கு இணை ஆணையர் விஜயகுமாரியிடம் வசந்தகுமாரி புகார் அளித்தார். இதையடுத்து நொளம்பூர் காவல்நிலைய ஆய்வாளர் சத்தியலிங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை வீட்டில் கொள்ளை அடித்த நொளம்பூரை சேர்ந்த அருண்குமார், ராஜ்குமார் ஆகிய இருவரை கைது செய்து 40 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் கொள்ளை நடைபெற்ற இரண்டே நாளில் கொள்ளையர்களை கைது செய்து நகையை மீட்டு தந்த இணை ஆணையர் விஜயகுமாரிக்கு அமெரிக்காவில் இருந்த மூதாட்டி வசந்தகுமாரி உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் தாயுள்ளம் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்த இணை ஆணையர் விஜயகுமாரி மற்றும் காவல்துறையினருக்கு உளமார நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார். இந்த கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.