தமிழ்நாடு

நீலகிரி: மலை உச்சியில் இருந்து குதித்த மூதாட்டி.. வீடியோவில் பதிவான பகீர் காட்சிகள்!

நீலகிரி: மலை உச்சியில் இருந்து குதித்த மூதாட்டி.. வீடியோவில் பதிவான பகீர் காட்சிகள்!

webteam

நீலகிரி மாவட்டம் உதகை தொட்டபெட்டா பகுதியில் வாழும் 63 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் சிகரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு மணி நேர தேடலுக்குப் பின் வனப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு இன்று மதியம் வந்த 63 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அங்குள்ள மலை உச்சியில் நின்று கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதை அங்கிருந்த சுற்றுலா பயணிகள் வீடியோ எடுத்துள்ளனர். சிலர் அவரை கூச்சலிட்டு தடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவர் விரக்தியில் மலையின் உச்சியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த சம்பவத்தை நேரடியாக பார்த்த சுற்றுலாப் பயணிகள், அவர் விழ தயாரானபோது அங்கிருந்த காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

மக்கள் அளித்திருந்த தகவலின்படி தொட்ட பெட்டா மலை சிகரத்திற்கு சென்ற காவல் துறையினர் சென்றுள்ளனர். ஆனால் அவரை காவல்துறையினரால் காப்பாற்ற முடியவில்லை. இந்நிலையில் அவர் கொண்டு வந்திருந்த ஹேண்ட் பேக்கை சோதனை செய்துள்ளனர். அதில் இருந்த ஆதார் கார்டில் கோவை மாவட்டம் தடாகம் பகுதியை சேர்ந்த லீலாவதி என்று தெரியவந்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து மலையின் உச்சியிலிருந்து கீழே வனப்பகுதியில் விழுந்த அப்பெண்ணை தேடும் பணியில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேர தேடலுக்குப் பின் இவரது உடல் வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

ஏன் அப்பெண் தற்கொலை செய்தார், அவரை தற்கொலைக்கு யாராவது தூண்டினார்களா போன்ற கோணங்களில் தேனாடுகம்பை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060)