சிவகங்கை மாவட்டம் ஒக்கூரில் நகைக்காக கழுத்தை நெரித்து மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை அருகே ஒக்கூர் பிள்ளையார்கோயில் செட்டியார் தெருவில் வசித்து வருபவர் ஆதப்பன்(82). இவரது மனைவி மீனாட்சி(78). இவர்களது மகன் தஞ்சையில் வசிக்கும் நிலையில், முதியோர் இருவரும் தனியே ஒக்கூரில் வசித்து வந்தனர். நேற்று மாலை இருவரும் கோயிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளனர். அப்போது இருவரையும் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
(ஆதப்பன்-மீனாட்சி தம்பதி )
பின்பு தம்பதிகள் இருவரையும் தாக்கி கீழே தள்ளியதில் மூதாட்டி மீனாட்சிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது மூதாட்டி அலறினார். இதனால் ஆத்திரமடைந்த நபர்கள் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ததுடன் அவரது கழுத்தில் கிடந்த 10 சவரன் தங்க சங்கிலி, காதில் கிடந்த தோடு ஆகியவற்றை பறித்துள்ளனர். இதனை தடுத்த மூதாட்டியின் கணவர் ஆதப்பனை கழுத்தில் மிதித்து பலமாக தாக்கிவிட்டு, நகைகள், பொருட்களுடன் தப்பியோடியுள்ளனர்.
இன்று அதிகாலை வீட்டிற்கு பால் கொடுக்க வந்தவர் வீடு திறந்து கிடந்த நிலையில், உள்ளே சென்று பார்த்தபோது மூதாட்டி இறந்த நிலையிலும், அவரது கணவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையிலும் இருந்துள்ளனர். இதனையடுத்து பால்காரர், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து, ஆதப்பனை சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை காவல்துறையினர் மோப்ப நாய்களின் உதவியுடன் கொலை செய்து விட்டு தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.