சென்னை கடலில் மிதக்கும் எண்ணெய்க் கழிவை அகற்ற போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எண்ணூர் துறைமுகம் அருகே இரு கப்பல்கள் மோதிக்கொண்டதால் அதிலிருந்த எண்ணெய் கொட்டி, எண்ணூர், மெரினா, எலியட்ஸ் கடற்கரையோரத்தில் படலமாக மிதக்கிறது. இதனை அகற்றும் பணியில், கடலோர காவற்படை, தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்புத்துறை, துறைமுக ஊழியர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள், உள்ளூர் மக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
கழிவை அகற்றும் பணி 8-வது நாளாக இன்றும் தொடர்கிறது. தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பணியினால், இதுவரை 61 டன் அளவிற்கு எண்ணெய்க் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள 21 டன் கழிவுகள் இரு தினங்களில் அகற்றப்பட்டுவிடும் என கடலோர காவற்படை தெரிவித்துள்ளது.
கழிவை அகற்றும் பணியில் கடலோர காவற்படையின் ஐ.சி.ஜி.எஸ் வராத் கப்பலும், ஹெலிகாப்டரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடலில் எண்ணெய் படிந்து மிதப்பதால் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்