தமிழ்நாடு

பட்டியலின மக்களின் குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலப்பு - அதிர்ச்சி சம்பவம்

webteam
புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முட்டுக்காடு ஊராட்சியில் உள்ள இறையூர் கிராமத்தின் வேங்கைவயல் தெருவில் 50க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதி மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக வேங்கைவயல் தெருப்பகுதியில் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் ஐந்து பேருக்கு கடந்த இரண்டு மூன்று நாட்களாக உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றபோது அவர்கள் உட்கொண்ட குடிநீரில் ஏதும் பிரச்னை இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் இன்று வேங்கைவயல் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அந்த பகுதி மக்கள் ஏறிச்சென்று பார்த்தபோது அந்த குடிநீரில் மலம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சம்பந்தப்பட்ட பட்டியலின மக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்தில் காவல்துறையினர் மற்றும் அன்னவாசல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த தொட்டியில் இருந்த தண்ணீரை வெளியேற்றியுள்ளனர். மேலும் இப்போது மக்களுக்கு மாற்றுக் குடிநீர் வழங்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும், சம்பவம் இடத்திற்கு வந்த கந்தர்வகோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, அந்த பகுதி பட்டியலின மக்களோடு பேச்சுவார்த்தை நடத்தி நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து குடிநீரில் மலம் கலந்த மர்ம நபர்களை கண்டறிந்து அவர்களை கைதுசெய்ய காவல்துறையினருக்கும் வருவாய்த்துறையினருக்கும் ஒன்றிய அதிகாரிகளுக்கும் கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னத்துரை அறிவுரை வழங்கினார்.
தற்போது சம்பந்தப்பட்ட கிராமத்தில் குளத்தூர் வட்டாட்சியர் சக்திவேல், அன்னவாசல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் தலைமையிலான அதிகாரிகளும், அதேபோல் காவல்துறையினரும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தங்கள் பகுதி மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க வழிவகை செய்வதோடு, இந்த இழிவான சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யாராக இருந்தாலும் அவரை கைதுசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்தம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள சூழலில் இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட காவல்துறையினரும் உரிய கள ஆய்வு மேற்கொண்டு இந்த இழிவான செயலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.