இந்தி தெரியாதவர்களை இந்தி துறைக்கு அதிகாரியாக நியமித்ததை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பச்சையம்மன் கோவில் குளத்தை இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை மூலம் 20 லட்சம் மதிப்பில் ஆழப்படுத்தி கரை அமைக்கும் பணியை தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்தி தெரியாதவர்களை இந்தி துறைக்கு அதிகாரியாக நியமிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு இந்த முடிவை உடனே மாற்ற வேண்டும். அதேபோல தமிழ் மொழியை அரசு மொழியாக அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பது எங்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
மத்திய அரசு உடனடியாக எங்கள் கோரிக்கையை ஏற்க வேண்டும். இருமொழிக் கொள்கை குறித்து தமிழக முதல்வர் ஏற்கனவே தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். தமிழக அரசுக்கு இரு மொழிக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தி திணிக்கப்படுவதாக சரக்கு மற்றும் சேவை வரி உதவி ஆணையர் பா. பாலமுருகன் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இதுகுறித்து மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கவரி வாரிய தலைவருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்தி தெரியாத தனக்கு இந்தி பிரிவில் உதவி ஆணையர் பொறுப்பு வழங்கியதில் துளியும் விருப்பமில்லை என்று தெரிவித்து இருந்தார். அத்துடன் இந்தி பிரிவில் உள்ள 3 அதிகாரிகளும் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் என்றும், அவர்களுக்கும் இந்தி தெரியாது என்றும் கூறினர். அலுவல் கடிதங்களும், குறிப்புகளும் இந்தியில் இருப்பதால் புரியாமல் கையெழுத்திடும் நிலை ஏற்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.