அதிகாரிகளின் மெத்தனப் போக்கு காரணமாக சட்டவிரோத விதிமீறல் கட்டுமானங்கள் தொடர்வதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
நீலகிரி, நடுவட்டம் கிராமத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட உணவகத்தில் சீல் வைப்பது தொடர்பாக உரிமையாளர் ஃபரீஸுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அதனை ரத்து செய்யக்கோரி ஃபரீஸ் வழக்குத் தொடர்ந்தார். அதில், கட்டுமானத்தை முறைப்படுத்தக்கோரி ஆன்லைனின் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஃபரீஸின் விண்ணப்பத்தை பரிசீலித்து வருவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
ஆனால், திட்ட அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக பேரூராட்சி செயல் அதிகாரி கூறினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 2008ஆம் ஆண்டு நீலகிரி மலைப்பகுதியை பாதுகாக்க சட்டவிதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டினர். அதன்படி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை புகைப்பட ஆதாரத்தோடு தாக்கல் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
மேலும், சட்டவிரோத கட்டுமானங்களை தடுக்காமல் அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் செயல்படுவதால்தான், விதிமீறல் கட்டுமானங்கள் தொடர்வதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், மனுதாரரின் கோரிக்கையை சட்டப்படி பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.