தமிழ்நாடு

இரு அணிகள் இணைப்பில் இன்று அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை: பொன்னையன்

இரு அணிகள் இணைப்பில் இன்று அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை: பொன்னையன்

webteam

அதிமுக இரு அணிகளுக்கிடையே இன்று அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்க இருப்பதாக ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த பொன்னையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரு அணிகள் இணைப்பு தொடர்பாக நேற்று தனியார் விடுதியில் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று பிற்பகல் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்குகிறது. இரு தரப்பிலிருந்தும் தலா 7 பேர் பங்கேற்பார்கள் என அவர் தெரிவித்தார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை மற்றும் சசிகலா குடும்பத்தை கட்சியை விட்டு ஒதுக்கி வைப்பது என்ற இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே கட்சியை இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலாவின் புகைப்படத்தை அகற்ற வேண்டும் என்றும் ஓபிஎஸ் அணி தரப்பில் கூறப்பட்டது. ஆனால், ’ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் சிபிஐ விசாரணை பற்றி தற்போது முடிவு எடுக்க முடியாது. நிபந்தனையற்ற பேச்சு வார்த்தைக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும்’ எடப்பாடி பழனிசாமி அணியினர் திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலாவின் பேனர்கள் இன்று காலை அகற்றப்பட்டன. இதனையடுத்து இருஅணிகள் இணைப்பு குறித்து இன்று அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்க உள்ளதாக பொன்னையன் தெரிவித்துள்ளார்.