தமிழ்நாடு

விவசாயிகளின் பேச்சை கவனிக்காமல் செல்போனில் மூழ்கிய அதிகாரிகள்! பயனில்லா குறைதீர் கூட்டம்?

webteam

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் செல்போனில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்த சம்பவம் நாமக்கல்லில் நடந்த குறைதீர் கூட்டத்தில் நடந்துள்ளது.

குறைதீர் கூட்டத்தில் செல்போன்கள் பயன்படுத்தகூடாது என்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டிருக்கும் அதிகாரிகள் மீது விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது பிரச்சினைகள் குறித்து பேசினர். இந்த கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகளும் பங்கேற்று விவசாயிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளையும் அங்கேயே ஆட்சியர் முன்னிலையில் கூறி வந்தனர்.

இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற்ற சில அதிகாரிகள் முறையாக விவசாயிகளின் பிரச்சினையை கவனிக்காமல் தங்களது செல்போன்களில் வீடியோ காட்சிகளை பார்த்துக் கொண்டும், சமூக வலைத்தளங்களில் மூழ்கி இருப்பதையும் காண முடிந்தது.

அதிகாரிகள் கூட்டங்களில் பங்கேற்கும் போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டிருந்த நிலையிலும் தொடர்ந்து செல்போனை பார்ப்பதை அதிகாரிகள் வாடிக்கையாகவே கொண்டுள்ளனர்.

இது விவசாயிகளின் குறைகளை கேட்காமல் கடமைக்கு கூட்டத்தில் பங்கேற்பது போல் உள்ளதாகவும், விவசாயிகளை அவமதிப்பது போல் உள்ளதாகவும், இதன் மீது ஆட்சியர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.