தமிழ்நாடு

செல்போனில் விளையாடிய அதிகாரிகள்: கண்ணீருடன் காத்திருந்த விவசாயிகள்!

Rasus

நாமக்கல்லில் நடைபெற்ற குறைதீர்ப்புக் கூட்டத்தில் விவசாயிகள் பேசும் போது, அதனை கண்டுகொள்ளாமல் செல்போனில் பேசிகொண்டும், சமூக வலைதளங்களை நோட்டமிட்டபடியும் அதிகாரிகள் இருந்தனர். இதனால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகளின் மாதாந்திர குறைத்தீர்ப்புக் கூட்டம் ஆட்சியர் ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்றது. அப்போது அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்கள், விவசாயிகள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் யாரும் செல்போன் பயன்படுத்த கூடாது என அறிவிக்கப்பட்டு அறிவிப்பு பலகைகளும் கூட்டரங்கில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனர், வருவாய் துறை மற்றும் புள்ளியல் துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பலர் விவசாயிகள் தங்களது குறைகள் குறித்து பேசி கொண்டிருந்த போது செல்போனில் பேசி கொண்டும், சமூக வளைத்தளங்களிலும் மூழ்கியிருந்தனர். இதனால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். அதிகாரிகள் தங்களது குறைகளை கூட, காது கொடுத்து கேட்காமல் இருப்பதாக கூறப்படும் புகாருக்கு இது ஒரு சிறந்த எடுத்துகாட்டு என்று கூறும் விவசாயிகள் வரும் காலத்தில் இது போன்ற நிகழ்வுகளை ஆட்சியர் தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.