தமிழ்நாடு

வீடுகளை இழந்து வீதியில் நிற்கும் குமரி மக்கள்

வீடுகளை இழந்து வீதியில் நிற்கும் குமரி மக்கள்

webteam

ஒகி புயலின் பாதிப்பால் வீடுகள், பொருட்களை இழந்து கன்னியாகுமரி மக்கள் வீதிகளில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒகி புயலால் கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. வீதிகள், வீடுகள் என அனைத்து இடங்களிலும் தண்ணீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. ஒகி புயலின் வேகத்தில் பல வீடுகள் இருந்த தடம் தெரியாமல் போய்விட்டன. இதனால் வீட்டுக்குள் இருக்க வேண்டிய பாத்திர பண்டங்களும், வீட்டு உபயோகப் பொருட்களும் வீதியில் கிடக்கின்றன. 

ஓகி புயலாலும் மழையாலும் ஏற்பட்ட பாதிப்புகள் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒவ்வொரு வீட்டிலும் வடுவாக பதிந்து கிடக்கின்றன. நாகர்கோவில் அருகே இலுப்பையடி காலனி பகுதியில் வெள்ளம் வடிந்த நிலையில், அங்குள்ள 4 குடியிருப்புகள்  முற்றிலும் இடிந்து போயிருக்கின்றன. பத்து வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்துள்ளன. அப்பகுதியினரின் வாழ்வாதாரமா‌க விளங்கிய 2500 வாத்துகள் இறந்துவிட்டன. ஒட்டுமொத்தமாக அழித்துவிட்ட புயல் பாதிப்புகளில் இருந்து மீண்டு வரும் வழி தெரியாமல் மக்கள் வேதனையில் உள்ளனர். மழை வெள்ளத்தில் புத்தகங்கள், புத்தகப்பை என அனைத்தும் அடித்துப்போய்விட, பள்ளி மாணவ மாணவிகள் எஞ்சிய புத்தகங்களை கண்ணீருடன் காயவைத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் விவசாய கூலிகளும், சாமான்யர்களும் உதவிக்காக காத்திருக்கிறார்கள்.