ஒகி புயல் பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட மூத்த அமைச்சர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேலும் வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு 'ஒகி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் தற்போது கன்னியாகுமரிக்கு தெற்கே சுமார் 60 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. ‘ஒகி’ புயல் உருவாகியுள்ளதால் பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். புயல் காரணமாக தென்தமிழகத்தின் அநேக இடங்களில் அடுத்த 36 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஒகி புயல் பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதால் பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு நிவாரணம் கிடைத்திட அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி உறுதிபட தெரிவித்துள்ளார்.