அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள ஓகி புயல் அடுத்த 24 மணி நேரத்தில் லட்சத்தீவுகளைக் கடக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அந்தமான் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த இரு தினங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளில் நகரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மற்றும் அரபிக் கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை இடைவெளி விட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 45 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.