சென்னையில் வடகிழக்கு பருவமழை பெருமளவில் பெய்துள்ள போதிலும், அரசின் நடவடிக்கையால் நிலைமை கட்டுக்குள் உள்ளது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் அரசு சார்பிலும், பல்வேறு துறைகள் சார்பிலும் முழுமையான முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புதன்கிழமை இரவு மட்டும் சென்னையில் 14 செ.மீ மழை பெய்தது. பகலில் அந்த நீரும் வடிந்து விட்டது. இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் மிகுந்த கனமழை பெய்து வெள்ளம் ஏற்படும் சூழல் நிலவியது.
இருப்பினும் சென்னையில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. அதற்காக அரசு சார்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே தேங்கி உள்ள மழைநீரும் கூடுதலாக வெளியேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.” என்று தெரிவித்தார்.