தமிழ்நாடு

“ஜெயலலிதா தெய்வமாக இருந்து பார்ப்பதால், பயந்துகொண்டு செயல்படுகிறோம்” - ஓபிஎஸ் பேச்சு

“ஜெயலலிதா தெய்வமாக இருந்து பார்ப்பதால், பயந்துகொண்டு செயல்படுகிறோம்” - ஓபிஎஸ் பேச்சு

webteam

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தெய்வமாக இருந்து பார்ப்பதால், தாங்கள் பயந்துகொண்டு திட்டங்களை நிறைவேற்றுவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளரும், தனது மகனுமான ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் வாடிப்பட்டி பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “திமுக மத்திய ஆட்சியில் இருந்த போது, பாழாய் போன சேது சமுத்திரம் திட்டத்தில் 40 ஆயிரம் கோடி ரூபாயை கடலுக்குள் போட்டார்கள். இது தான் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் மக்களுக்கு செய்த தீங்கு. அதிமுகவின் திட்டத்தை பார்த்து திமுக பொறாமைப்படுகிறார்கள். ஸ்டாலின் முதலமைச்சராக முடியவே முடியாது. அதிமுக-வை எந்த கொம்பாதிக் கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாது.

அதிமுக-வை எந்த சுனாமி வந்தாலும், பூகம்பம் வந்தாலும் அசைத்து பார்க்க முடியாது. அதிமுக-வை மு.க.ஸ்டாலின் தொட்டுக்கூட பார்க்க முடியாது. ஜெயலலிதா கொண்டுவந்துள்ள திட்டங்களை மக்களுக்கு முறையாக கொண்டு சேர்க்கிறோமா ? இல்லையா ? என்பதை ஜெயலலிதா தெய்வமாக இருந்து பார்த்து வருவதால், நாங்கள் பயந்துகொண்டு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்” என்று கூறினார். பரப்புரையின் போது பன்னீர் செல்வத்துடன் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் ஆகியோர் உடனிருந்தனர்.