பெற்றோரை பார்த்துக் கொண்டு பள்ளிக்குச் செல்லும் மாணவி அனிதா குறித்த செய்தி புதிய தலைமுறையில் வெளியானதன் எதிரொலியாக, சிறுமிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புதிதாக வீடு கட்டிக் கொடுத்து சாவியை வழங்கினார்.
பெரியகுளம், தேனி தேனி மாவட்டம் சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த சிறுமி அனிதா. இவர் தன்னுடைய நடக்க முடியாத தந்தை சந்திரசேகரை கவனித்துக்கொண்டும் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட தனது தாய் முத்தம்மாளுக்கு பணிவிடைகள் செய்து கொண்டும் படித்து வந்தார். குடும்பத்துக்கு சரியான வருமானம் இல்லாததால் அனிதா கல்விச் செலவுகளுக்கு சிரமப்படுவது பற்றி கடந்த ஆண்டு ஜூலை மாதம் புதிய தலைமுறையில் செய்தி ஒளிபரப்பானது.
இதையடுத்து சிறுமிக்கு உதவிகள் குவிந்தன. முதல்கட்டமாக 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை மற்றும் கல்விச் செலவுகளை ஏற்பதாக தெரிவித்திருந்தார். மேலும், புதியதாக வீடு கட்டித் தருவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட வீட்டின் சாவியை அனிதா குடும்பத்தினருக்கு அவர் நேரில் வழங்கியுள்ளார்.
இது குறித்து பேசிய மாணவி அனிதா, ''என்னை பற்றி புதிய தலைமுறையில் செய்தி வெளியிட்டார்கள். அதைப்பார்த்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எனக்கு ரூ.25 ஆயிரம் பணம் கொடுத்து உதவி செய்தார். மாதம் மாதம் 3 ஆயிரம் உதவித்தொகையும் கொடுத்துவருகிறார். அது போல வீடு கட்டித்தருவதாக கூறினார். அதுபோல தற்போது வீடு கட்டிக்கொடுத்துள்ளார்'' என்று தெரிவித்தார்.