அதிமுகவின் உச்சியில் இருந்தபோதும், ஜெயலலிதாவின் நிழலாக செயல்பட்ட பன்னீர்செல்வம், கட்சி ஆதரவை இழந்தபின் திமுகவில் இணைந்திருக்கிறார். இது தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு வங்கியை பெரிதும் பாதிக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பன்னீர்செல்வம் காட்டிய அசைக்க முடியாத விசுவாசமே ஓ. பன்னீர் செல்வத்தை உச்சிக்குக் கொண்டு சென்றது. 2001, 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் ஜெயலலிதா இக்கட்டான சூழல்களைச் சந்தித்தபோது, தனது நம்பிக்கைக்குரிய மாற்றராக பன்னீர்செல்வத்தையே தேர்ந்தெடுத்தார். அதிகாரத்தின் உச்சியில் இருந்தபோதும், ஜெயலலிதாவின் நிழலாகவே செயல்பட்ட பன்னீர்செல்வம், ஒருபோதும் அவரது தலைமைக்குச் சவால் விடவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் ஒற்றைத் தலைமைப் பொறுப்பைக் கைப்பற்றுவதில் பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்திற்கும் இடையே கடும் மோதல் வெடித்தது.
கட்சி இயந்திரம் மற்றும் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமி பக்கம் சாய்ந்ததால், பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்டார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவியைத் தக்கவைக்க அவர் நடத்திய சட்டப் போராட்டங்களும் பலன் தரவில்லை. கடந்த 2024 மக்களவைத் தேர்தலில், அதிமுக இல்லாத பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓபிஎஸ் இணைந்தார். இருப்பினும், தேர்தல் முடிவுகள் அவருக்குச் சாதகமாக அமையவில்லை. அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழுவைத் தொடங்கி, மீண்டும் அதிமுகவில் இணையத் தயார் என அவர் சமிக்ஞை கொடுத்த போதிலும், பழனிசாமி அவரைச் சேர்க்கத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் திமுகவில் ஐக்கியமாகியிருக்கிறார் பன்னீர்செல்வம். நீண்டகால அரசியல் எதிரியான திமுகவில் அவர் இணைந்திருப்பது, தமிழக அரசியல் சதுரங்கத்தில் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் பன்னீர்செல்வத்தை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கிய தங்கத் தமிழ்ச்செல்வனும், இப்போது பன்னீர்செல்வமும் ஒரே சின்னத்தின் கீழ் செயல்பட உள்ளனர். இந்த இணைப்பு தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு வங்கியைப் பெரிதும் பாதிக்கும் எனக் கருதப்படுகிறது. பன்னீர்செல்வத்தின் இந்த மாற்றம் வெறும் கட்சித் தாவலாக கடந்து போக முடியாது. அது அவரது அரசியல் எதிர்காலத்தை காத்துக் கொள்வதற்கான கடைசி முயற்சியாவே பார்க்க வேண்டியுள்ளது என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.