தமிழ்நாடு

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு

ஜா. ஜாக்சன் சிங்

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 2 அணு அலகுகள் இயங்கி வரும் நிலையில், 3 மற்றும் 4ஆவது அலகுகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இப்போது செயல்படும் அணு உலைகளில் இருந்து உருவாகும் அணுக்கழிவுகளை வளாகத்திற்கு வெளியே சேமிக்க திட்டமிட்டபோது மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அணு உலை வளாகத்திலேயே அவற்றை சேமிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், 3 மற்றும் 4-ம் அணு அலகுகள் செயல்பாட்டுக்கு வந்ததும் அவற்றின் அணுக்கழிவுகளை வளாகத்திற்கு வெளியே சேமிப்பதற்கு மையம் அமைக்க இந்திய அணுசக்தி மையம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. வரும் 24-ம் தேதி அவை திறக்கப்பட உள்ளன.

கர்நாடகா மாநிலம் கோலாரில் பயனற்ற சுரங்கப் பகுதியில் அணுக்கழிவு சேமிப்பு மையம் ஏற்படுத்த முடிவெடுக்கப்பட்டதற்கே உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அந்த முடிவை கைவிட செய்தனர். அப்படி இருக்கும்போது, கூடங்குளத்தில் அணு உலைக்கு வெளியே அணுக்கழிவு மையம் அமைப்பது ஆபத்தானது. எனவே, இதனை உடனடியாக தடுத்து நிறுத்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.