தமிழ்நாடு

ஜெயலலிதா மரணம் - ஓ.பன்னீர் செல்வம் நேரில் ஆஜராக சம்மன்

ஜா. ஜாக்சன் சிங்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக வரும் 21-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தர்மயுத்தம் மேற்கொண்டார். அதிமுக ஒருங்கிணைந்த போது, ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 154 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது.

இதனிடையே, அப்போதைய துணை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் அவர் ஆணையத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்நிலையில், மூன்றாண்டு காலம் நீதிமன்ற வழக்கு காரணமாக விசாரணை நடைபெறாமல் இருந்தது. தற்போது மீண்டும் விசாரணை தொடங்கியிருப்பதால் ஓ.பன்னீர்செல்வத்தை எப்போது ஆணையம் விசாரிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

அந்த வகையில், வரும் 21-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு ஓ.பன்னீர்செல்வத்திற்கும், சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசிக்கும் ஆறுமுசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. இதுவரை ஓ.பன்னீர் செல்வத்திற்கு 9 முறை சம்மன் அனுப்பப்பட்டது. பல்வேறு காரணங்களால் நேரில் ஆஜராக முடியாமல் இருந்த சூழ்நிலையில், வரும் 21-ம் தேதி அவர் ஆணையம் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளிப்பார் எனக் கூறப்படுகிறது.