தமிழ்நாடு

பேச்சுவார்த்தையில் உடன்பாடு: செவிலியர்கள் போராட்டம் வாபஸ்

பேச்சுவார்த்தையில் உடன்பாடு: செவிலியர்கள் போராட்டம் வாபஸ்

rajakannan

அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து செவிலியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் நேற்று போராட்டத்தைத் தொடங்கினர். டி.எம்.எஸ் வளாகத்தில் இரண்டாவது நாளாக இன்றும் செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் செவிலியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன. பாஜக மாநில தலைவர் தமிழிசை போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களின் பிரதிநிதிகளுடன் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதனையடுத்து போராட்டத்தை சந்தோஷமான மனநிலையில் வாபஸ் பெறுவதாக பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட செவிலியர்கள் தெரிவித்தனர். 

மேலும் அவர்கள் கூறுகையில், “பேச்சுவார்த்தை என்பது கோரிக்கைகளை நிறுவேற்றுவதற்காகவே தவிர போராட்டத்தை தொடர்வதற்கு அல்ல. நாளை முதல் செவிலியர்கள் பணிக்கு திரும்புவார்கள். 90 சதவீதம் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி” என்றனர். 

இதனிடையே பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே, பணிக்கு வராததற்கான காரணம் குறித்து விளக்கம் அளிக்குமாறு செவிலியர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் உங்களை ஏன் பணியில் இருந்து நீக்கக்கூடாது என்றும் கேட்கப்பட்டிருந்தது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் நாளை பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டது.