தமிழ்நாடு

செவிலியர்கள் போராட்டம் நடத்துவதும் கோஷம் போடுவதும் ஆட்சிக்கு ஆபத்தானது – விஜயபாஸ்கர்

webteam

இரண்டரை ஆண்டு காலம் கொரோனா பணி செய்து தற்போது பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டரை ஆண்டு காலம் கொரோனா பணி செய்து தற்போது பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று டி.எம்.எஸ் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் ஈடுபட்ட நிலையில், மருத்துவர் சுகாதாரத்துறை இயக்குனருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வு எட்டப்படாத நிலையில், வள்ளுவர் கோட்டத்தில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் 3,200 செவிலியர்கள் பணிக்கு எடுக்கப்பட்டனர். மருத்துவத் தேர்வாணையம் மூலம் தேர்வெழுதி வந்த இந்த செவிலியர்கள் கொரோனா காலத்தில் அவசர நிலையில் பணியில் அமர்த்தபட்டனர். இந்நிலையில் டிசம்பர் 30 ஆம் தேதி கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களை பணி நீக்கம் செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் செவிலியர்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜனவரி முதல் மூன்று தேதிகளில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து நேற்று டிஎம்எஸ், இன்று வள்ளுவர் கோட்டம் என செவிலியர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் இருந்து 800-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களின் நியமிக்கப்படும் செவிலியர் காலி இடங்களில் தற்போது பணி இழந்துள்ள செவிலியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்து தற்போது ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியபோது...

கொரோனா மருத்துவமனை என ஓமந்தூரார் மருத்துவமனையை அமைத்து விட்டு செவிலியர்களை பார்த்தால், அங்கு யாரும் இல்லை. கொரோனாவுக்கு பயந்து நிறைய பேர் பணிக்கு வரவில்லை. சவாலான காலகட்டத்தில் பணியில் இருப்பவர்களே பயந்து ஓடிய நிலையில், தங்கள் உயிரை துச்சமென நினைத்தவர்கள் இந்த செவிலியர்கள்.

அதனால் தான் எடப்பாடி பழனிச்சாமி எங்களை இங்கு அனுப்பியுள்ளார். ஆனால் டிஎம்எஸ் வளாகத்திலும் வள்ளுவர் கோட்டத்திலும் செவிலியர்களை போராட்டம் செய்யும் நிலைக்கு இந்த அரசு தள்ளிவிட்டது. உங்களை விதி மீறலால் பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியபோது வேதனையாக இருந்தது.

செவிலியர்களுக்கான மாத ஊதியம் 7 ஆயிரம் என இருந்த நிலையில், 14 ஆயிரம் ரூபாய் என எடப்பாடி பழனிசாமி உயர்த்தினார் ஆயிரம் செவிலியர்களுக்கு பணி ஆணை அனுப்பினாலும், 100 செவிலியர்கள் மட்டுமே பணிக்கு வந்தனர். அவ்வாறு அழைக்கப்பட்ட செவிலியர்கள் போராட்டம் நடத்துவது கோஷம் போடுவது இந்த ஆட்சிக்கு ஆபத்தான ஒன்று.

தொடர்ந்து 12 மணி நேரம் கவச உடை அணிந்து சிகிச்சை அறையில் மா.சுப்பிரமணியன் இருப்பாரா? கழிப்பறை செல்ல முடியாது, குடும்பத்தை பார்க்க முடியாது. நெருக்கடியான காலகட்டத்தில் தேர்வெழுதி, மருத்துவ தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்பட்டனர். இவர்கள் அனைவரும் மெரிட்டில் தேர்வானவர்கள். மிகப்பெரிய பாவத்தை இந்த அரசு செய்துள்ளது.

இந்த விஷயத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை. உங்கள் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என அரசை கேட்டுக் கொள்கிறேன். அரசியலை தாண்டி, கட்சி பேதத்தை தாண்டி கூறுகிறோம், பணியில் இருந்தபோது எத்தனை பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டது. இவர்களை பணியில் எடுப்பதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளது.

கலகத் தலைவன் படம் நன்றாக இருக்கிறதா என்று கேட்கும் முதல்வர் என்றாவது நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா என்று கேட்டிருப்பாரா என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களை பார்த்து விஜயபாஸ்கர் கேட்டார்.