தமிழ்நாடு

கோவிட் கவச உடையோடு 12-ம் நாள் செவிலியர்கள் போராட்டம்... போராட்டக்களத்தில் கண்ணீர் காட்சி!

webteam

பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் சென்னையில் 12 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தின் அடுத்தவடிவமாக கொரோனா காலத்தில் கடினப்பட்டு பணியாற்றதை நினைவு கூறும் வகையில், பிபிஇ கிட் அணிந்து தலைமைச் செயலகத்தை முற்றுகையிட சென்னை எழும்பூரில் இருந்து பேரணியாக சென்றனர். இந்தப் பேரணியில் சென்றவர்களை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் பகுதியில் போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது செவிலியர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பல செவிலியர்கள் குண்டு கட்டாக போலீசாரால் தூக்கி செல்லப்பட்டு பேருந்தில் ஏற்றப்பட்டனர்.

கோவிட் 19 என்னும் கொரோனா நோய் தொற்றானது கடந்த 2020 தொடக்கத்தில் உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவில் கடந்த 2019-2020 காலகட்டத்தில் பரவிய கொரோனாவின்போது, மருத்துவ சேவை அதிகமாக தேவைப்பட்டதால் அவசர அவசரமாக தமிழகம் முழுதும் பல்வேறு மாவட்டங்களில் ஒப்பந்த செவிலியர்கள் பணியில் சேர்க்கப்பட்டனர். எம்ஆர்பி என்னும் மருத்துவ தேர்வாணையத்தின் மூலம் செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேக்கப்பட்டனர். கடந்த 2 ஆண்டுகள் 7 மாதங்களாக பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி தமிழக அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில் கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட 2472 ஒப்பந்த செவிலியர்களை பணி நீக்கம் செய்வதாக அரசு உத்தரவிட்டது.

கொரோனா நோய் பரவிய நெருக்கடியான காலத்தில் பணியாற்றி தங்களை வேலையை விட்டு அனுப்புவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், மருத்துவர்களை பணி நிரந்தரம் செய்தது போல தங்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் வலியுறுத்தினர். பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னும் அரசு செவிசாய்க்காததால் செவிலியர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் நடைபெற்ற போராட்டம் சென்னையில் ஒருங்கிணைக்கப்பட்டது. டிஎம்எஸ் மருத்துவப் பணிகள் இயக்குநர் அலுவலகம், மருத்துவ கல்வி இயக்குநர் அலுவலகம் என்று அரசு அலுவலங்களை முற்றுகையிட்டு செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



போராட்டத்தை தொடர்ந்து அரசு தரப்பில் மருத்துவப் பணிகள் இயக்ககம், சுகாதார துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. பணிநீக்கம் செய்யப்பட்ட கொரோனா கால ஒப்பந்த செவிலியர்கள் அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஹெல்த் சொசைட்டி நிர்வாகம் மூலம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மக்களை தேடி மருத்துவம் திட்டம் போன்றவைகளில் உள்ள காலியிடங்களில் பணியமர்த்தப்படுவார்கள். முன்பு ரூ.14000 பெற்ற செவிலியர்களுக்கு, தற்போது ரூ.18000 ஆயிரம் வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முன்பு பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வந்த செவிலியர்களுக்கும், தற்போது அவரவர்கள் மாவட்டங்களிலேயே பணி கிடைக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இதனை ஏற்க மறுத்த செவிலியர்கள் சென்னையில் போராட்டத்தை தொடர்ந்தனர். உண்ணாவிரத போராட்டம், தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் போன்றவைகளை நடத்தினர். இந்த நிலையில் இன்று 12ஆவது நாளாக தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக செவிலியர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இதன்படி சென்னை எழும்பூரில் உள்ள ரவுண்டானா பகுதியில் கொரானா கால செவிலியர்கள் குவித்தனர். குறிப்பாக கொரோனா காலத்தில் கஷ்டப்பட்டு பணியாற்றியதை எடுத்து கூறும் வகையில், கொரோனா பாதுகாப்பு கவச உடை பிபிஇ கிட் அணிந்து செவிலியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். கோட்டை நோக்கி பேரணியாக புறப்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார். `கொரோனா கால செவிலியர்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தேமுதிக சார்பில் பெரிய போராட்டம் நடத்தப்படும்’ என்று பிரேமலதா கூறினார்.



இதன்பிறகு செவிலியர்கள் கோட்டை நோக்கி பேரணியை தொடர்ந்தனர். புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் அரங்கம் வரை செவிலியர்கள் கோரிக்கையை முழக்கமிட்டபடி சென்றனர். ராஜரத்தினம் அரங்கம் வந்தபோது அங்கு தடுப்புகள் அமைத்து செவிலியர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அங்கேயே செவிலியர்கள் கோரிக்கைகளை விளக்கி முழக்கமிட்டனர். காவல்துறை பேரணியை இதற்கு மேல் அனுமதிக்க முடியாது. ஆகவே களைந்து செல்லுமாறு செவிலியர்களுக்கு அறிவுறுத்தினர். ஆனால் இதை ஏற்க மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை போலீஸார் கைது செய்தனர். அப்போது பேருந்தில் ஏற மறுத்து செவிலியர்களுக்கு போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் செவிலியர்களை போலீஸார் குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்து பேருந்தில் ஏற்றினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சில செவிலியர்கள் தங்களது நிலையையும் போராட்டத்தின் நியாயத்தையும் எடுத்து கூறினார். சிலர் அழுது புலம்பிய சம்பவங்களும் அரங்கேறியது.



இந்த நிலையில், ராஜரத்தினம் அரங்கம் பகுதியில் கைது செய்து ஒரு பேருந்தில் ஏற்றி செல்லப்பட்ட 50ற்கும் மேற்பட்டவர்கள் திடீரென பேருந்தில் இருந்து கீழே இறங்கி எத்திராஜ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸார் மறியலில் ஈடுபட்ட செவிலியர்களை குண்டு கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்.



மாவட்ட அளவில் பணி வழங்குவது எங்களை மீண்டும் ஏமாற்றுவதாக அமையும். ஆகையால் பணி நிரந்தரம் வழங்கும் வரை, ஒப்பந்த அடிப்படையிலான பழைய நிலையிலேயே பணியாற்றி விடுகிறோம். அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களின் கோரிக்கையாக உள்ளது.