அமைச்சருடன் தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்திய செவிலியர்கள் போராட்டம் கைவிடப்படுவதாக அறிவித்திருந்த நிலையில், டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள செவிலியர்கள் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் நேற்று போராட்டத்தைத் தொடங்கினர். டி.எம்.எஸ் வளாகத்தில் இரண்டாவது நாளாக இன்றும் செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட செவிலியர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டதாக கருதப்பட்டது.
ஆனால், அரசாணை எண் 191-ஐ நிறைவேற்றும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள செவிலியர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து செவிலியர்கள் கூறுகையில், “அரசு பேச்சுவார்த்தையை ஒரு அறையில் நடத்தக் கூடாது பொதுவெளியில் நடத்த வேண்டும். இரண்டு ஆண்டுகள் முடிந்தும் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளோம். காவல்துறையினர் எங்களுக்கு பாதுகாப்பு தான் அளிக்கிறார்கள். அழுத்தம் எதுவும் தரவில்லை. பணிக்கு திரும்பவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அனுப்பிய நோட்டீஸ் பற்றிய தகவல் எங்களுக்கு கிடைத்தது. அதனைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. கோரிக்கைகள் நிறைவேறும் வரை எத்தனை நாட்கள் ஆனாலும் டி.எம்.எஸ் வளாகத்தில் எங்களது போராட்டம் தொடரும்” என்றனர்.