தமிழ்நாடு

”போராட்டம் தொடரும்” வெளியேற்றும் போலீசார்..செல்ல மறுக்கும் செவிலியர்கள்-சேலத்தில் பரபரப்பு

webteam

தொகுப்பூதிய அடிப்படையில் பணி வழங்க வலியுறுத்தி சேலம் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர் கைது செய்யப்பட்டனர்.

கொரோனா காலத்தில் மருத்துவ தேர்வு ஆணையத்தின் மூலம் தற்காலிகமாக பணியாற்றிய தங்களுக்கு அதே மருத்துவத் தேர்வாணையத்தின் மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சேலத்தில் மூன்று நாட்களாக செவிலியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 250க்கும் மேற்பட்டோர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில் அமைதியான முறையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த செவிலியர்களை நேற்று மாலை நேரத்தில் காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இருப்பினும் அடைத்து வைக்கப்பட்ட மண்டபத்தில் இருந்தே செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தாங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் போதிய கழிப்பறை வசதி கூட இல்லாத நிலையில் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு கூட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்த தங்களுக்கு முறையான உணவு கூட வழங்கப்படவில்லை என்றும் செவிலியர்கள் வேதனை தெரிவித்தனர். எத்தனை கெடுபிடிகள் காவல்துறையினர் கொடுத்தாலும் தங்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்றும் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை தொடர்வோம் என்று செவிலியர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இந்நிலையில், செவிலியர்களை அதிகாலை 3 மணிக்கு எழுப்பிய காவல்துறையினர் அவர்களை மண்டபத்திலிருந்து வெளியேற்றினர். இருப்பினும், காவல்துறை கொண்டு வந்த பேருந்தில் ஏற மறுத்து செவிலியர்கள் நடந்து சென்றனர். வழியெங்கும் முழக்கங்கள் எழுப்பியபடி சுமார் ஐந்து கிலோ மீட்டருக்கு மேல் நடந்து சென்றனர்.

சுமார் ஐந்து கிலோமீட்டர் வரை நடந்து வந்த செவிலியர் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதிய பேருந்து நிலையம் பகுதிக்கு நடக்க வைத்து அழைத்து வரப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த செவிலியர் தஸ்னேவிஷ் மயங்கி விழுந்தார். இரண்டரை ஆண்டுகள் உயிரை பணயம் வைத்து சேவையாற்றிய தாங்கள் வஞ்சிக்கப்படுவதாக கண்ணீர் விட்டு கதறி அழுதனர். கலைந்து சென்ற செவிலியர்கள் போராட்டத்தை தொடருவோம் என அறிவித்துள்ளனர்.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 4 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.