இயற்கை உபாதைகளை கூட கழிக்கவிடாமல் தங்களை மறைமுகமாக சித்ரவதை செய்வதாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என இரண்டாவது நாளாக செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை அண்ணாசாலையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர் ஒருவர் கூறும்போது, “அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 5000-க்கும் அதிகமான செவிலியர்கள் இங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் எங்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் எப்படியாவது கூட்டத்தை கலைக்கத்தான் போலீசார் திட்டமிட்டுள்ளனர். நேற்று இரவே கைது செய்யப்படலாம் என பேசப்பட்டது. ஆனால் கைது செய்யவில்லை. கொட்டும் பனியிலும் விடிய விடிய எங்களது போராட்டம் தொடர்ந்துள்ளது. எங்களின் குழந்தைகளும் இந்த கொட்டும் பனியில் கஷ்டப்பட்டனர். இயற்கை உபாதாகளை கூட கழிக்கவிடாமல் இங்குள்ள அனைத்து கழிவறைகளும் அடைக்கப்பட்டுள்ளன. அப்படியென்றால்தான் நாங்கள் வெளியே செல்வோம் என மறைமுகமாக சித்ரவதை செய்யப்படுகிறது. மனித உரிமை மறுக்கப்பட்டு, மீறப்படுகிறது” என தெரிவித்தார்.
இதனிடையே செவிலியரின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும் என தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போராட்டத்தை செவிலியர்கள் உடனே கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.