பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளில், பெரியாருக்கு எதிராக கோஷம் எழுப்பிய நாதக நிர்வாகி, பெரியார் சிலையை காலணியால் தாக்கி அவமதித்ததால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த சம்பத்திற்கு பிறகு நாம் தமிழர் கட்சியை தடை செய்யவேண்டும் எனவும், சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக மற்றும் மதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை ஜாபர்கான் பேட்டையில் பேரறிஞர் அண்ணாவின் 56ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. அப்போது நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி அஜய் என்பவர் மேடையில் ஏறி பெரியாருக்கு எதிராக கோஷம் எழுப்பினார்.
சிறிது நேரத்தில் மேடையில் வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையில் காலணியால் தாக்கி அவமரியாதை செய்தார். உடனடியாக அங்கிருந்த மக்கள் நாம் தமிழர் நிர்வாகியை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் நாதக நிர்வாகி அஜயை கைது செய்த காவல்துறையினர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தப்படுத்தினர். தொடர்ந்து பிப்ரவரி 18-ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அஜய்.