பாரம்பரிய பூவன் வாழை ரகத்துக்குப் பதிலாக காவேரி பூவன் என்ற புதிய வாழை ரகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்.
திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையம், பாரம்பரிய பூவன் ரகத்திற்கு மாற்றாக 'காவேரி பூவன்' என்ற புதிய உயர் விளைச்சல் ரகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 20 ஆண்டுகால தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகு உருவாக்கப்பட்ட இந்த ரகம், விவசாயிகளின் லாபத்தை அதிகரிப்பதோடு நுகர்வோருக்கு கூடுதல் ஆரோக்கியத்தையும் வழங்குகிறது. பாரம்பரிய பூவன் ஒரு ஹெக்டேருக்கு 48 டன்கள் விளைச்சல் தரும் நிலையில், காவேரி பூவன் ரகம் 58 முதல் 65 டன்கள் வரை அதிக மகசூல் தருகிறது. பூவன் வாழையைத் தாக்கும் 'வாழை கீற்று வைரஸ்' மற்றும் 'வாடல் நோய்' ஆகியவற்றை முழுமையாக எதிர்க்கும் திறன் கொண்டது.
இது அதிக கனிமச்சத்துக்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் பண்புகளைக் கொண்டுள்ளது; மேலும்இது நீண்ட காலம் கெடாமல் இருக்கும். தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் இது சிறந்த முடிவுகளைத் தந்துள்ளதாக வாழை ஆராய்ச்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழை ஆராய்ச்சி மையம் இதுவரை ஒன்பது வாழை ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 2007இல் உதயம், 2019இல் காவேரி கன்யா, காவேரி சபா மற்றும் காவேரி ஹரிதா, 2021இல் காவேரி சுகந்தம், 2022இல் காவேரி கல்கி, 2024இல் காவேரி காஞ்சன், 2025இல் காவேரி வாமன் மற்றும் இப்போது காவேரி பூவன் ஆகிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.