தமிழ்நாடு

தமிழகத்தில் என்.பி.ஆர் கணக்கெடுப்பு பணிகள் நிறுத்திவைப்பு: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

webteam

தமிழகத்தில் என்.பி.ஆர் கணக்கெடுப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிஏஏ, என்.ஆர்.சி., என்.பி.ஆர்., ஆகிய சட்டங்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் பல போராட்டங்கள் நடந்து வருகின்றன. டெல்லியில் இந்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் கடுமையான வன்முறை வெடித்தது. ஒரே நேரத்தில் இந்தச் சட்டங்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் போராட்டக்காரர்கள் குழுமியதால் இந்த வன்முறை ஏற்பட்டது.

இதனிடையே, தமிழகத்திலும் எதிர்க்கட்சியினர் இச்சட்டத்தை எதிர்த்து போராடி வருகின்றனர். திமுக தனது தலைமையில் பெரிய பேரணியை நடத்தியது. வண்ணாரப்பேட்டையில் சில இஸ்லாமிய அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட போது போலீசார் தடியடி நடத்தி மக்களை கலைத்தனர். அதன் தொடர்ச்சியாக பல ஊர்களில் போராட்டங்கள் பரவின. ஆகவே என்பிஆருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சியினர் வற்புறுத்தி வருகின்றனர். தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது.

இந்நிலையில், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை” என்று குறிப்பிட்ட அவர், என்பிஆர் கணக்கெடுப்பின் போது, எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்றார். மேலும், என்பிஆர் குறித்து எதிர்க்கட்சியினர் தவறான தகவல்களை தருகின்றனர். இது தொடர்பாக தமிழக அரசு கடிதத்திற்கு மத்திய அரசின் பதில் இதுவரை கிடைக்காததால் கணக்கெடுப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், இந்தப் புதிய சட்டத்தில் மூன்று கேள்விகள் இணைக்கப்பட்டுள்ளன. அது குறித்து விளக்கம் வராததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.