தமிழ்நாடு

இனி தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

இனி தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

webteam

தமிழகத்தில் மின்வாரியம் சிறப்பான திட்டங்கள் மூலம் தன்னிறைவு பெற்றுள்ளதால், இனி தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பவானி அருகேயுள்ள காளிங்கராயன்பாளையம் பகுதியில் சிற்றரசர் காளிங்கராயன் மணிமண்டபம் திறப்பு விழா நடைபெற்றது. ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மணிமண்டபத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து, பொதுமக்கள் பார்வைக்கு தொடங்கி வைத்தார். இதனையடுத்து பவானியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 166 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பசுமை வீடுகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனம் உள்ளிட்ட உதவிகள் வழங்கினார். மேலும், 76 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட சாலை விரிவாக்கம், குடிநீர் திட்டம் உள்ளிட்ட பணிகளை தொடங்கிவைத்தார். 

இதேபோல், 58 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இதனைதொடர்ந்து கூட்டத்தில் உரையாற்றிய அவர், காளிங்கராயன் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படுமென அறிவித்தார். மேலும், அரசின் அனைத்து துறைகளின் திட்டங்கள் குறித்து விளக்கினார். அப்போது, விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருவதாகவும், அணைகள் கட்ட ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் மின்வாரியம் சிறப்பான திட்டங்கள் மூலம் தன்னிறவு பெற்றுள்ளதால், இனி தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது என்றும் தெரிவித்தார்.