தமிழ்நாடு

95 கிமீ தொலைவில் ‘கஜா’ புயல் - 110 கிமீ வேகத்தில் காற்று வீசும்

95 கிமீ தொலைவில் ‘கஜா’ புயல் - 110 கிமீ வேகத்தில் காற்று வீசும்

rajakannan

நாகைக்கு தென்கிழக்கே 95 கிலோமீட்டர் தொலைவில்‘கஜா’ புயல் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போதைய நிலவரப்படி புயல் கரையை கடக்கும் போது, 90 கிமீ முதல் 110 கிமீ வரை காற்று வீசக் கூடும். கடலூர் மற்றும் பாம்பன் இடையே புயல் கரையைக் கடக்கும். புயலின் வெளிப்புறப்பகுதி ஏற்கனவே கடலோரப் பகுதியில் கரையைக் கடந்துவிட்டது. கடலோர மாவட்டங்களில் மழை ஏற்கனவே பெய்து வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “கஜா புயல் கரையைக் கடக்கும்போது டெல்டா மாவட்டங்களில் மழை அல்லது கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கஜா புயல் வலு குறைந்தாலும் அரபிக் கடலுக்கு செல்லும் போது வலுப்பெறக் கூடும். அரபிக் கடல் நோக்கி கஜா புயல் செல்லும் போது நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது வரை 26 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. 20 செ.மீ மட்டுமே மழைப்பதிவாகியுள்ளது.  

கஜா புயலால் கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் மொத்தம் 164 முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 45 நிவாரண முகாம்களில் 10,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாகை மாவட்டத்தில் மட்டும் 44,087 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.