திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே ஒரு கன்றுக்குட்டிக்கு இருவர் உரிமை கோரியதால் மரபணு பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
முத்துப்பேட்டையை அடுத்த ஜம்புவானோடை பகுதியைச் சேர்ந்த ராஜரத்தினம் மற்றும் மதியழகன் ஆகியோர் மூன்றரை வயதான கன்றுக்குட்டியை தங்கள் பசுதான் ஈன்றது என்று கூறி உரிமை கோரினர். இந்த விவகாரம் காவல்நிலையம் வரை சென்றது. இருவரையும் காவல்நிலையத்தில் அழைத்து விசாரித்த போலீசார், கன்று மதியழகனின் பசுவுடன் சென்றதால், அவருக்கே சொந்தமானதாகக் கருதி அனுப்பி வைத்தனர். இதற்கு கடுமையான எதிர்ப்பினை ராஜரத்தினம் பதிவு செய்ததுடன், காவல்நிலையத்தில் புகாரும் அளித்தார். இதையடுத்து உண்மையைக் கண்டுபிடிக்கும் பொருட்டு கன்றுக்குட்டிக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
டிஎன்ஏ சோதனை சாத்தியமா?:
கன்று குட்டிக்கு மரபணு சோதனை சாத்தியமா என்பது குறித்து பேசிய தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திலகர், இதுபோன்ற சோதனைகள் சாத்தியம்தான். ஆனால் அதிகசெலவுமிக்கது. மேலும், பல்வேறு தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து செய்ய வேண்டிய அந்த சோதனை அவ்வளவு எளிதானதல்ல என்று தெரிவித்தார்.