ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்களின் விடுதலையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில், மாறன் சகோதரர்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த முறைகேடு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இருவரையும் குற்றமற்றவர்கள் என விடுவித்தது. சிறப்பு நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து சிபிஐ, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
மாறன் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை முறையிட்டது. இந்த மனுவை, மே 19 ஆம் தேதி விசாரித்த உயர் நீதிமன்றம், இதுகுறித்து மாறன் சகோதரர்கள் நான்கு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல்செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த நிலையில், மாறன் சகோதரர்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ‘அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று மாறன் சகோதரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, பி.எஸ்.என்.எல் இணைப்பு முறைகேடு வழக்கு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றப்பத்திரிகையைப் பெற, மாறன் சகோதரர்கள் இன்று ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூன் 6 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.