தமிழக அரசின் நீட் மசோதா எங்கே இருக்கிறது என்றே தமக்கு தெரியவில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், நீட் தேர்வு மசோதா பற்றி தமிழக அரசு மத்திய அரசுடன் பேசி வருவதாக கூறினார். மேலும், நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட அவசரச்சட்டம் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது பற்றி தமக்கு தெரியாது எனவும் தெரிவித்தார்.
இதனிடையே, நீட் தேர்விலிருந்து ஓராண்டு விலக்கு அளித்தபோது தமிழக அரசு என்ன செய்து கொண்டிருந்தது என பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாடத்திட்டம் மாற்றம் செய்ய கூடுதலாக அவகாசம் தேவை என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கும் எனவும் தெரிவித்தார். நீட் தேர்வுக்கு எதிராகப் போராடுவதை விடுத்து, மாணவர்களைத் தயார் செய்யும் ஆக்கப்பூர்வ பணியில் மு.க.ஸ்டாலின் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.