கரூரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் அதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்விக்கு எந்தப் பதிலும் அளிக்காமல் சென்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக தலைவர் விஜய் இன்று மாலை கரூரில் பரப்புரையில் ஈடுபட்ட நிலையில், அவரைக் காண்பதற்காக ஆரம்பம் முதலே தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலருக்கும் மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு அதில் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து பரப்புரை முடிந்து கூட்டம் கலைந்த நிலையில் மேலும் பலர் மயக்கமடைந்தனர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 31 பேர் தற்போது உயிரிழந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது மேலும் உயரக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம், அடுத்தடுத்த உயிரிழப்புகளால், பிரேதப் பரிசோதனை அறைக்கு உயிரிழந்தோரின் உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன. இதனால், உறவினர்கள் கதறி அழும் காட்சிகள் காண்போரை மேலும் கண்ணீர் சிந்த வைக்கின்றன. இந்த துயர நிகழ்வால் கரூரே சோகத்தில் மிதக்கிறது; கண்ணீரில் நனைகிறது.
இந்த நிலையில், பரப்புரையை முடித்துக் கொண்டு உடனே திருச்சி புறப்பட்டார் விஜய். திருச்சியில் இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்ப முயன்றனர். ஆனால் அவர், அவர்களைக் கொஞ்சம்கூடத் திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டார். அவருடைய இந்தச் செயல, தவெக தொண்டர்களிடையே மட்டுமல்லாது பலரிடையேயும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.