நீதிமன்றத்தில் சுதந்திரத்தை கேட்டதாகவும், தற்போது கல்லூரி சிறைக்குள் சிக்கிக் கொண்டதாகவும் ஹாதியா கூறியுள்ளார்.
சேலத்தில் உள்ள தனியார் ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி முன்பு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது இவ்வாறு அவர் கூறினார்.
ஹாதியா பேசும் போது, “எனக்கு பிடிக்காதவர்களுடன் கடந்த ஆறு மாத காலமாக வாழ்ந்து வந்தேன். எனது பெற்றோர்கள் என்னை மனமாற்றம் செய்ய முயற்சித்தார்கள். 6 மாதமாக செய்திதாளையோ, தொலைக்காட்சிகளையோ பார்க்காமல், இருட்டில் வாழ்ந்து வந்தேன். என் கணவரை கூட சந்திக்க முடியாமல் இருந்தேன். என்விருப்பம் எல்லாம் விரும்பியவர்களுடன் பேச வேண்டும் என்பது தான்.
நீதிமன்றத்தில் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று கேட்டேன், ஆனால் இதுவரை என்னால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. நான் சுதாந்திரமாக இருக்கிறேனா, இல்லையா என்பதை என்னால் தெரிவிக்க முடியவில்லை. இது போன்ற சுதந்திரத்தை எதிர்பார்க்கவில்லை. இதுவும் மற்றொரு சிறை போல் இருக்குமோ என எண்ண தோன்றுகிறது. நான் மனதளவில் பாதிக்கப்பட்டதாக பெற்றோர் கூறுகிறார்கள்.
எல்லா குடிமக்களும் அனுபவிக்கும் அடிப்படை உரிமைகளைத்தான் நான் கோருகிறேன். இதில் அரசியலோ, ஜாதியோ இல்லை. நான் நேசித்த ஒருவரை பார்க்க விரும்புகிறேன். நீதிமன்றம் அனுமதிக்கும் என்று நம்புகிறேன். என்னிடம் செல்போன் இல்லை. அடிப்படை சுதந்திரம் வேண்டும் என்று நான் நீதிமன்றத்தில் கோரி இருந்த போதும், இதுவரை நான் யாரையும் தொடர்பு கொண்டு பேசவே இல்லை. தற்போது கல்லூரி சிறையில் சிக்கியுள்ளேன்” இவ்வாறு கூறினார்.
இதனையடுத்து, கல்லூரி முதல்வர் கண்ணன் கூறுகையில், “அவரது கணவர் யார் என்று எங்களுக்கு தெரியாது. எங்களை பொறுத்தவரை இன்னும் அவர் அகிலா தான். கல்லூரியில் அவரை சேர்ந்த பெற்றோர்கள் தான் பொறுப்பாளர்கள். அவர்களை தவிர வேறு யாரையும் பார்க்க அனுமதிக்க முடியாது. பெற்றோர்கள் சந்திக்கும் போது எங்களது அலுவலர்கள் நிச்சயம் உடன் இருப்பார்கள். கல்லூரி விடுதியில் செல்போன் அனுமதி கிடையாது. இங்கு படிப்பதற்கு தான் மாணவர்கள் வந்திருக்கிறார்கள்” என்றார்.
கேரள மாநிலத்தை சேர்ந்த ஹாதியா, சேலம் ஹோமியோபதி மருத்துவக்கல்லூரியில் படித்து வந்தார். இவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதல் திருமணம் செய்துகொண்டார். தனது மகளை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்துவிட்டதாக ஹாதியாவின் பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கேரள உயர்நீதிமன்றத்தில் ஹாதியாவின் பெற்றோர்களுக்கு சாதகமான தீர்ப்பு வெளியானது. இதனையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து ஹாதியா சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஹாதியா சேலம் ஹோமியோபதி கல்லூரியில் தனது படிப்பை தொடர உச்சநீதிமன்றம் நேற்று முன் தினம் அனுமதி அளித்தது. இதனையடுத்து ஹாதியா நேற்று சேலத்தில் உள்ள ஹோமியோபதி கல்லூரிக்கு வந்தார்.