சைலேந்திரபாபு ஐபிஎஸ்
சைலேந்திரபாபு ஐபிஎஸ் twitter page
தமிழ்நாடு

விஷச்சாராயம் விற்றவருக்கே நிவாரணம் அறிவித்த தமிழக அரசு! வெளியான அதிர்ச்சி தகவல்

PT WEB

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் நிகழ்ந்த இரு வெவ்வேறு சம்பவங்களில் விஷச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இதுவரை 14 பேரும், செங்கல்பட்டில் 8 பெரும் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு, திருவண்ணாமலை, சேலம் மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் இருந்து சிறப்பு மருத்துவக் குழுவினர் வந்து, மருத்துவம் பார்ப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விஷச் சாராயம் விற்ற அமாவாசை என்பவருக்கும் ரூ.50,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. விஷச் சாராயம் விற்று கைதானவர்களில் அமாவாசையும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ’மரக்காணம் மற்றும் சித்தாமூரில் விற்கப்பட்டது விஷச்சாராயம்’ என்று காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பம், மற்றும் சித்தாமூரை அடுத்த பெருங்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களில் கைப்பற்றப்பட்ட சாராயம் தடய ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அதன் ஆய்வறிக்கையில், ஆலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனாலை கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மெத்தனாலை, ஓதியூரைச் சேர்ந்த அமரன் என்ற சாராய வியாபாரி விற்பனை செய்துள்ளார். அமரனிடம் நடத்திய விசாரணையில், அவர் முத்து என்பவரிடம் வாங்கியதாகவும், முத்து, புதுச்சேரியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரிடம் வாங்கியதாகவும் கூறியுள்ளனர். வெவ்வேறு நபர்களிடம் கைமாறி, சித்தாமூரிலும், மரக்காணத்திலும் விற்கப்பட்ட விஷச்சாராயமும் ஓரிடத்திலிருந்து வந்தது.

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது பெருமளவு தடுக்கப்பட்ட நிலையில், தொழிற்சாலையிலிருந்து, விஷச்சாராயத்தை திருடி சிலர் விற்றுள்ளதால் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. எந்தத் தொழிற்சாலையிலிருந்து மெத்தனால் வந்தது, அதில் யாருக்கு தொடர்பு உள்ளது என்று விசாரணை நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் 2022ஆம் ஆண்டு மட்டும் 1 லட்சத்து 41 ஆயிரம் சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2023இல் இதுவரை 55,474 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.