செய்தியாளர்: வெ.செந்தில்குமார்
அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அரசு கொறடாவுமான தாமரை. ராஜேந்திரனின் மகள் திருமண விழாவில், முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்று திருமணத்தை நடத்தி வைத்தார். இதைத் தொடர்ந்து இந்த திருமண விழாவில் அவர் பேசிய போது...
அரியலூர் மாவட்டம் அதிமுகவின் கோட்டை:
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 2024 பாராளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெற்றோம் என்று கூறி வருகிறார். ஆனால், அரியலூர் மாவட்டத்தில் உள்ள இரு சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்று 100 சதவீத வெற்றியை பெற்றுள்ளது அரியலூர் மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் நலத்திட்டங்கள் எதுவும் செய்யவில்லை என ஸ்டாலின் பத்திரிகை மற்றும் ஊடகத்தின் வாயிலாக செய்திகளை பரப்பி வருகிறார். இது கண்டனத்துக்குரியது.
விவசாயிகள் நலனில் அக்கறையோடு அதிமுக ஆட்சி செயல்பட்டது:
தமிழகத்தில் அதிமுக ஆட்சியின்போது அரியலூருக்கு மருத்துவக் கல்லூரி, ஜெயங்கொண்டத்தில் அரசு கலைக் கல்லூரி என 14 மருத்துவக் கல்லூரிகள், 6 சட்டக் கல்லூரிகள், வேளாண் ஆராய்ச்சி நிலையம், அனைத்து பகுதிகளிலும் மேம்பாலங்கள், சாலைகள் என பல்வேறு நலத்திட்டங்களை எனது தலைமையிலான 43 கால ஆட்சியில் செயல்படுத்தி உள்ளேன். அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மக்காச்சோள பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட போது விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக 186 கோடி மதிப்பீட்டில் நிவாரணம் வழங்கப்பட்டது. விவசாயிகள் நலனில் அக்கறையோடு அதிமுக ஆட்சி செயல்பட்டது.
46 மாதத்தில் தமிழகத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட தொடங்க முடியவில்லை:
விவசாயிகளை மீட்டெடுத்த ஒரே இயக்கம் அதிமுக மட்டும் தான். காவேரி வேளாண் பாதுகாப்பு மண்டலம் அறிவித்து விவசாயிகளை எப்போதும் அரவணைத்துக் கொள்ளும் ஒரே இயக்கம் அதிமுக மட்டும் தான். ஆனால், இதையெல்லாம் ஸ்டாலின் மறந்து பேசி வருகிறார். அவர் ஆட்சி பொறுப்பேற்ற 46 மாதத்தில் தமிழகத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட தொடங்க முடியவில்லை. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட நலத்திட்டங்களை ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி ஆட்சி நடத்தி வருகிறார் என்பதுதான் உண்மை என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.